பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் | உளவுத்துறை எச்சரிக்கையால் ஏழு மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

230

பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடும் கோபம் அடைந்துள்ள, பாகிஸ்தான் தீவிரவாதிகள், புல்வாமாவில் நடத்தியது போன்ற பயங்கர தாக்குதலை, நாட்டின் பிற மாநிலங்களில் நடத்தி, வீரர்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நாட்டின் பல நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா நகரில், கடந்த பிப்ரவரியில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 4௦ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதுபோன்ற தாக்குதலை, டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், நடத்த உள்ளதாக, உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த மாநிலங்களில், பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.