பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுடன் ஆளுனர் இன்று ஆலோசனை..!

261

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுனர் பன்வாரிலால், இன்று மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் கொலை வழக்கில், 28 ஆண்டு காலமாக சிறையில் வாடிவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுனருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று விடுதலை செய்வது, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பது அல்லது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஆகிய 3 முடிவுகளில், ஏதாவது ஒரு முடிவை, ஆளுனர் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், ஆளுனர் பன்வாரிலால் காலந்தாழ்த்தப்போவதில்லை என ராஜ்பவன் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றே, டெல்லியில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுனர் பன்வாரிலால் உரையாடியுள்ளார். இதனையடுத்து, இன்று மத்திய அரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் ஆளுனர் பன்வாரிலால், 7 பேர் விடுதலை தொடர்பாக, முக்கிய அறிவிப்பை இன்றே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,