ஓடும் ரயிலில் நடைபெற்ற ஆறு கோடி ரூபாய் கொள்ளை தொடர்பாக முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

308

ஓடும் ரயிலில் நடைபெற்ற ஆறு கோடி ரூபாய் கொள்ளை தொடர்பாக முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் ஆறு கோடி ரூபாய் கொள்ளை போனது தொடர்பாக ரயில்வே காவல்துறை உதவியுடன் சி.பி.சி.ஜ.டி. காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள், ரயில்வேத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று உள்ளது. இந்நிலையில், ரயில்வே பாதுகாப்புப்படை ஐ.ஜி. பாரி தலைமையிலான குழுவினர், சேத்துப்பட்டு பணிமனை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த ஆய்வில், கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய தடயம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று அடுக்குகளை கொண்ட ரயில் பெட்டியின் மேற்கூரையில், முதலாவது மற்றும் மூன்றாவது அடுக்கு இரும்பு தகடுகளை கொண்டதாக இருக்கும். இடையே உள்ள இரண்டாவது அடுக்கு வெப்பத்தை தாங்கும் பஞ்சு போன்ற பொருளால் அமைந்திருக்கும். கொள்ளையர்கள் மேற்கூரையை துளையிடும் போது இரண்டாவது அடுக்கில் இருந்த பஞ்சு போன்ற பொருளை எடுத்துள்ளனர். இதை முக்கிய தடயமாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சேத்துப்பட்டு பணிமனை பகுதியில் பஞ்சு போன்ற அந்த பொருளை கண்டெடுத்துள்ளனர். இந்த பொருள் கொள்ளைப்போன பெட்டிக்கு உரியது தானா என்பது குறித்து ஆய்வு நடத்திய பிறகுதான் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.