ரூ. 45 கோடியில் தாம்பரம் பெருங்களத்தூரில் சுரங்க நடைபாதைகள்! ரெயில்வே அதிகாரி தகவல்!!

302

தாம்பரம், பெருங்களத்தூர் ரெயில் நிலையங்களில் ரூ. 4.5 கோடி செலவில் இரு சுரங்க நடைபாதைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று, தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அனுபம் ஷர்மா கூறினார்.
தாம்பரத்தில் ரெயில்வே முனையம் அமைக்கும் பணி, சுரங்க நடைபாதை அமைக்கும் இடம் ஆகியவற்றை அதிகாரிகளுடன் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
நகரும் படிக்கட்டு
தாம்பரத்தில் ரெயில்வே முனையம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிழக்கு தாம்பரம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ. 2.5 கோடி செலவில் கிழக்கு தாம்பரத்தையும், மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையையும் இணைக்கும் சுரங்க நடைபாதை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கி, 2017 மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்.
மேலும், பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் பெருங்களத்தூரையும், ஜி.எஸ்.டி. சாலையையும் இணைக்கும் சுரங்க நடைபாதை ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்படும். அதற்கான பணியும் விரைவில் தொடங்கப்படும்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்கள் நின்று செல்ல பயன்படுத்தப்படும் 5, 6 மற்றும் 7, 8 நடைமேடைகளில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கி ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
சுரங்க நடைபாதை
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் பேசியபோது, கிழக்கு தாம்பரம் பகுதி மக்களின் 7 ஆண்டுகால கோரிக்கையான சுரங்க நடைபாதை,பெருங்களத்தூர் சுரங்க நடைபாதை உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறை
வேற்றித் தரும்படி ரெயில்வே நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் ரெயில்வே கட்டுமானப் பணிகளையும் துரிதமாக நிறைவேற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளனர் என்றார் அவர்.