3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவு..!

263

மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், கேரளா, குஜராத், கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தமாக ஆயிரத்து 640 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 13 மாநிலங்களிலும் மொத்தம் 64 புள்ளி 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அஸ்ஸாமில் 78 புள்ளி 29 சதவீதம், பீகாரில் 59 புள்ளி 97 சதவீதம், சத்தீஸ்கரில் 65 புள்ளி 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தாத்ரா நாகர் ஹவேலியில் 71 புள்ளி 43 சதவீதம், டாமன் டையு 65 புள்ளி 34 சதவீதம், கோவாவில் 71 புள்ளி 09 சதவீதம், ஜம்மூ காஷ்மீரில் 12 புள்ளி 86 சதவீதம் என வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. குஜராத்தில் 60 புள்ளி 21 சதவீதம், கேரளாவில் 70 புள்ளி 21 சதவீதம் என இரண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

கர்நாடகாவில் 64 புள்ளி 14 சதவீதம், மகாராஷ்டிராவில் 56 புள்ளி 57 சதவீதம், ஒடிசாவில் 58 புள்ளி 18 சதவீதம், திரிபுராவில் 78 புள்ளி 52 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 57 புள்ளி 74 சதவீதம், மேற்கு வங்கத்தில் 79 புள்ளி 36 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் உள்ள கிர் காடு பகுதியில், ஒரே ஒரு வாக்காளர் உள்ளார். பரத்தாஸ் பாபு என்ற அந்த முதியவர் தனது வாக்கினை பதிவு செய்ததன் மூலம் இந்த மையத்தில் 100 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.