18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு

317

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 அதிமுக எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து, 18 எம்எல்ஏ-க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, ஜூன் 14ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை, கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல் மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் முன்னிலையில் நடைபெற்றது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் தரப்பிலும், முதலமைச்சர் தரப்பிலும், அரசு கொறடா தரப்பிலும் கடந்த 12 நாட்களாக வாதங்கள் முன்வைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், 13-வது நாளான இன்று, இந்த வழக்கு விசாரணையில், சபாநாயகர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தது. எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதங்கள் முன்வைத்து முடித்தார். இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், 3-வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.