18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்க வழக்கு நாளை தீர்ப்பு வர இருப்பதாக தகவல்..!

686

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக இருப்பதாக, வந்துள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க விலிருந்து டிடிவி.தினகரன் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்.எல்.ஏ-கள் 18 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில், தன்னிச்சையாக ஆளுநரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் கடிதம் அளித்தார். இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிவுற்று நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில், எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை சபநாயகர் தனபால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள் என கூறப்படுகிறது.