12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை ஒன்பதரை மணிக்கு இணையதளத்தில் வெளியீடு..!

893

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
நடப்பாண்டில் தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதியுள்ளனர். இந்த நிலையில், காலை ஒன்பதரை மணிக்கு இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்கள், www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில், பெற்றோர்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து, அரவணைக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்வு முடிவுகள் வெளிவந்தபின், மனச்சோர்வுடன் காணப்படும் மாணவர்களை கண்டறிந்து. அவர்கள் தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 24 மணிநேரமும் செயல்படும் உடனடி தகவல் மையம் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது என்றும்,தேவைப்படுபவர்கள் 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளை பெறலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.