அதிமுக கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்..!

240

கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துணைமுதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ,பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர், அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்த, சசிகலாவின் அதிரடியால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இரு அணிகள் உருவாகின.

இதனைத்தொடர்ந்து, சசிகலா சிறைக்குச் சென்றபின், இருஅணிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு இணைந்தன. அப்போது, கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஒற்றைத்தலைமை தேவை என்ற விவகாரம் விஸ்வரூபமெடுத்ததை அடுத்து, ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், முன்னதாக, தான் கூறிய வழிகாட்டுதல் குழு குறித்து நினைவுபடுத்திப் பேசினார். மேலும், 15 நாட்களுக்குள், கட்சியை வழிநடத்த, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஓ.பன்னீர் செல்வம், அப்படி செய்தால்தான், வரும் உள்ளாட்சித்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அதிமுகவில் இனி கட்சி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க, முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.